2017ஆம் ஆண்டு மேற்கு லண்டனில் உள்ள புட்னி பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த பெண் ஒருவரை பேருந்து செல்லும் பாதைக்குள் தள்ளியதாக சந்தேகிக்கப்பட்ட 44 வயதான நிக்கலஸ் பிராண்ட்ரம் தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
புட்னி பிரிட்ஜில் இடம்பெற்ற சம்பவத்தின் CCTV காணொளி அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. அந்தப் பெண் பேருந்தில் மோதுவதற்கு மிக அருகில் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பிராண்ட்ரம் கடந்த ஜூன் மாதம் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்த முயன்றதாகும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை லண்டனின் Chiswick பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவின்றி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸாரும் அவசர மருத்துவப் பணியாளர்களும் அங்கு சென்றுள்ளனர். எனினும், 44 வயதான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணம் எதிர்பாராத மரணமாகக் கருதப்பட்டாலும், சந்தேகத்திற்கிடமானதாகத் தெரியவில்லை என Metropolitan Police தெரிவித்துள்ளது.
பிராண்ட்ரம் முன்னதாக Scots Guards படையில் Captain ஆக ஆப்கானிஸ்தானில் பணியாற்றியிருந்ததுடன், பின்னர் HSBC வங்கியின் private banking பிரிவில் பணியாற்றியதாக BBC தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் கைது செய்யப்பட்டபோது, போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.





