செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி தொடர்பில் மக்கள் கவலைப்படுவது நியாயமானது என Sam Altman தெரிவித்துள்ளார்.
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மன், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் பேசியபோது, AI தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதால் அதன் ஆபத்துகள் குறித்து உலகம் அச்சப்படுவதற்கு காரணம் இருப்பதாகக் கூறினார்.
அதேவேளை, AI நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார். AI-யின் திறன்கள் வேகமாக அதிகரிக்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதன் வளர்ச்சியை விட முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும், அது சாத்தியமில்லாத சூழலில் நிறுவனங்கள் தங்களது AI தயாரிப்புகளின் வளர்ச்சியை குறைக்கவோ நிறுத்தவோ வேண்டும் எனவும் ஆல்ட்மன் கூறினார்.
இதனிடையே, AI நிறுவனங்களை முழுமையாக சுயமாகக் கட்டுப்படுத்த அனுமதிப்பது குறித்து சில அரசியல்வாதிகளும் தொழில்துறை நிபுணர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மறுபுறம், Jensen Huang உள்ளிட்ட சில AI தொழில்துறை தலைவர்கள், புதிய AI மாதிரிகளை வெளியிடுவது தொடர்பான பாதுகாப்பு முடிவுகளை நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
AI பாதுகாப்பு தொடர்பில் OpenAI, Anthropic மற்றும் Google DeepMind உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தொழில்துறை அளவிலான பாதுகாப்புத் தரநிலைகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடி வருவதாக BBC தெரிவித்துள்ளது.





