பிரிட்டனின் சஃபோல்க் பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவன் நோவா வுட்ஸை தேடும் பணியில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், பிராந்தம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உறவினரிடமிருந்து பிரிந்த பின்னர் நோவா காணாமல் போனார். பேச முடியாததுடன், ஓரளவு காது கேளாத சிறுவன் என்பதால் அவரைத் தேடும் பணியில் பெருமளவிலான மீட்புக் குழுக்கள் களமிறங்கின.

பொலிஸாருடன் இணைந்து சுமார் 1,300 பொதுமக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள், டைவர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் தேடுதலில் இணைந்திருந்தன.
நோவா கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 320 மீட்டர் தொலைவில் உள்ள டிகாய் பாண்ட் எனப்படும் குளத்திலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, குளத்தில் இருந்து சிறுவன் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக சஃபோல்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், மீட்கப்பட்ட உடல் நோவா வுட்ஸுடையதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த சம்பவம் சந்தேகத்திற்கிடமான மரணமாக கருதப்படவில்லை என்றும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல் மீட்கப்பட்ட தகவல் நோவாவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் தனியுரிமையை மதிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நோவாவைத் தேடும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு அவசர சேவை அமைப்புகளும் இணைந்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.





