இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 80% தொற்றா நோய்களால் (NCDs) ஏற்படுகின்றன என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் புதிய நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் நேற்று (16) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் முக்கிய காரணிகளாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் சுமார் 50% பேர் மட்டுமே நோயை பயனுள்ள முறையில் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், நீரிழிவு நோயாளிகளில் சுமார் 25% பேர் மட்டுமே முறையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், அவற்றின் தீவிரமான விளைவுகளில் மாரடைப்பும் (MI) ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சுகாதார கட்டமைப்பை தற்போதைய மக்கள் தொகை மற்றும் நோய் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ‘ஆரோக்கியா’ (Arogya), கொத்தணி சுகாதார அமைப்புகள் மற்றும் உயர்நிலை பராமரிப்பு நிறுவனங்கள் ஆகிய மூன்று முக்கிய துறைகளை வலுப்படுத்துவது எதிர்கால சுகாதார சேவைக்கு முக்கியமானதாகும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.





