நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக, மூன்று முக்கிய துறைகளின் கீழ் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் புதிய நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்த பின்னர் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலவச சுகாதார சேவையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குதல், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல், சிறந்த சுகாதார முகாமைத்துவ முறைமையை உருவாக்குதல் ஆகிய மூன்று துறைகளில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனமான JICA-வின் கடன் உதவியின் கீழ் ரூ.3,545 மில்லியன் செலவில், 8 மாடிகளைக் கொண்ட இந்த இருதய சிகிச்சைத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் வடமத்திய மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நவீன இருதய மற்றும் இருதய–மார்பு சத்திரசிகிச்சை வசதிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இந்த நிலையத்தில் Coronary Care Unit, ICU, Catheterization Labs, X-Ray, ECG, விசேட சிகிச்சைப் பிரிவுகள், வார்டுகள் மற்றும் ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், அநுராதபுரம் வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்காக 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் சுமார் ரூ.19,000 மில்லியன் பெறுமதியான புதிய திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களையும் இணைத்துக் கொண்டால், அநுராதபுரம் வைத்தியசாலை அபிவிருத்திக்காக ரூ.34,000 மில்லியனுக்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மாணப் பணிகள் தாமதமடைவதால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய இருதய சிகிச்சைத் தொகுதியின் பணிகளை 18 மாதங்களுக்குள் நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.





