யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹூதிகள் கடந்த வாரம் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் எல்-மண்டெப் நீரிணை பகுதிகளில் வேகமாக முன்னேறியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா சீனாவிடம் உதவி கோரியதாக மூன்று ஈரானிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஹூதிகளின் முன்னேற்றம் காரணமாக சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கடல் வழி வர்த்தகப் பாதைகளுக்கு அதிகரித்துள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுவெளியில் சீனா, பிராந்தியத்தில் நிதானம், பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பான கடற்போக்குவரத்தை மீள நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதேவேளை, தனிப்பட்ட முறையில் ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஹூதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என சீனா கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த ஈரான், பிராந்தியத்தில் நிலைத்தன்மை மற்றும் அமைதி ஏற்பட வேண்டுமெனில் அமெரிக்கா–இஸ்ரேல் போர் முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் மேற்கோள்காட்டிய ஈரானிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
உலகின் முக்கிய எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்படும் மேலும் பாதிப்புகள் சீனாவின் பொருளாதார நலன்களையும் பாதிக்கக்கூடும் என்பதால், இந்த மோதல் மேலும் விரிவடைவதைத் தடுப்பதில் சீனா கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஹூதிகளின் சமீபத்திய இராணுவ முன்னேற்றங்கள் சவுதி அரேபியாவுக்கு செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டெப் பகுதியில் புதிய பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.





