இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்துள்ள ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்பில், அவரது வாக்குமூலத்தை காணொளியாக பதிவு செய்வது குறித்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற IPL சூதாட்ட சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தமக்கு எதிராக அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, ஓய்வுபெற்ற IPS அதிகாரி ஜி. சம்பத் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தோனி கடந்த 2014ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ரூ.100 கோடி இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வாக்குமூலத்தை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என சம்பத் குமார் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாக்குமூலத்தை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட காணொளியை எந்தவிதமான எடிட்டிங்கும் இன்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனு தொடர்பாக அக்டோபர் 9ஆம் திகதிக்குள் மகேந்திர சிங் தோனி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2013 IPL சூதாட்ட சர்ச்சையுடன் தமது பெயர் தொடர்புபடுத்தப்பட்டதாகக் கூறி தோனி தொடர்ந்த இந்த ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





