“புத்துயிர்க்கும் புதிய நகரம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்று வரும் உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, நான்காம் நாளான சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தினத்தை முன்னிட்டு விசேட மருத்துவ முகாம் சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாசங்கர், சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி எம்.எஸ். றிஸ்க்கா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





