விண்வெளியில் புதிய ஆயுதப் போட்டியா? – செயற்கைக்கோள்களை குறிவைக்கும் ஆயுதங்கள் குறித்து அதிகரிக்கும் அச்சம்

அமெரிக்கா பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு விண்வெளி ஆயுதத்தை நிலைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், விண்வெளியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் இராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய விண்வெளி ஆயுதப் போட்டி குறித்து கவனம் திரும்பியுள்ளது.

அமெரிக்கா வெளியிட்ட தகவலின்படி, குறித்த ஆயுதம் எதிரிகளின் நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்க இராணுவ செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்காக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், அதன் துல்லியமான திறன், எப்போது நிலைநிறுத்தப்பட்டது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது செயற்கைக்கோள் தொடர்புகளை முடக்கும் மின்னணு போர் சாதனமாக இருக்கலாம் என சில விண்வெளி பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். அதேவேளை, செயற்கைக்கோள்களை நேரடியாக சேதப்படுத்தக்கூடிய அல்லது அவற்றின் சுற்றுப்பாதையை மாற்றக்கூடிய தொழில்நுட்பமாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி இராணுவமயமாக்கல் புதிய விடயம் அல்ல. 1960களின் இறுதியில் சோவியத் ஒன்றியம் மற்ற செயற்கைக்கோள்களை குறிவைக்கும் திறன் கொண்ட ‘செயற்கைக்கோள் அழிப்பான்’ திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உளவு, பாதுகாப்பான தகவல் தொடர்பு, ஏவுகணை கண்காணிப்பு மற்றும் இராணுவ இலக்குகளை துல்லியமாக கண்டறிதல் போன்ற பணிகளுக்காக செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துகின்றன.

குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா கடந்த சில ஆண்டுகளில் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அருகில் சென்று இயங்கக்கூடிய Rendezvous and Proximity Operations (RPO) எனப்படும் தொழில்நுட்பங்களை சோதித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய தொழில்நுட்பங்கள் விண்வெளிக் குப்பைகளை அகற்றுவது போன்ற அமைதியான நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். அதே நேரத்தில், எதிரி செயற்கைக்கோள்களை நகர்த்துவது அல்லது செயலிழக்கச் செய்வது போன்ற இராணுவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டால் அதிகளவில் விண்வெளிக் குப்பைகள் உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு சீனா மேற்கொண்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனையால் உருவான குப்பைகளில் சில இன்னும் சுற்றுப்பாதையில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு வகையான செயற்கைக்கோள் எதிர்ப்பு அல்லது விண்வெளி எதிர்ப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், விண்வெளி தொழில்நுட்பத்தில் இராணுவ பயன்பாடு அதிகரித்து வருவது எதிர்காலத்தில் புதிய விண்வெளி ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு மிகப்பெரிய புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதைவிட, அதன் போட்டி நாடுகளுக்கு வழங்கப்படும் ஒரு மூலோபாய மற்றும் அரசியல் சமிக்ஞையாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore