திருகோணமலை அநுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் நேற்று (18) இரவு இடம்பெற்ற ஆயுதக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியை காட்டி அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொலைபேசி மூலம் கிடைத்த தகவலையடுத்து, திருகோணமலை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தற்காலிக தங்குமிடமொன்றில் வைத்து இருவரையும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்டாக பணியாற்றுபவர் எனவும், கிளிபுஞ்சிமலை பகுதியில் உள்ள வெடிபொருள்/ஆயுத களஞ்சியத்தில் கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 54 மற்றும் 61 வயதுடைய ஹக்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 11,500 ரூபாய் பணம், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், T-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 29 தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





