தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசுக்கு சொந்தமான கப்பல் ஒன்றுடன் சீன கடலோரக் காவல் கப்பல் மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில் இடம்பெற்றுள்ளது.
BRP Datu Magat Salamat என்ற பிலிப்பைன்ஸ் மீன்வளத் திணைக்கள கப்பல், பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பலாவன் மாகாணத்திலிருந்து சுமார் 54 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கூற்றுப்படி, சீனக் கப்பல் முதலில் பிலிப்பைன்ஸ் கப்பலின் பாதையை சுமார் 10 மீற்றர் தொலைவில் குறுக்கிட்டுள்ளது. சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் அதேபோன்று செயற்பட்டு கப்பலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலில் பிலிப்பைன்ஸ் கப்பலின் பக்கவாட்டு தடுப்புகள் மற்றும் மேல் தளத்தின் சில கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எனினும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் தரப்பின் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பல் எச்சரிக்கைகளை புறக்கணித்து திடீரென தனது பாதையை மாற்றி சீனக் கப்பலின் முன்னால் சென்றதே மோதலுக்கு காரணம் என சீனத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தென் சீனக் கடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் மோதல்கள் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய சம்பவமும் பிராந்தியத்தின் பதற்றத்தை மேலும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.





