திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் உள்ள மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் மற்றும் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இன்று (19) பிற்பகல் சுமார் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு யுவதிகள் மற்றும் இளைஞர் ஒருவர் ஆற்றில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நால்வர் ஆபத்தான பகுதியில் நீராடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்றபோது ஏனைய மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன மூன்று யுவதிகள் மற்றும் இளைஞரை தேடும் பணிகள் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாயமானவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





