ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (19) காலை சுமார் 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், எனினும் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





