இத்தாலியில் பாடசாலைகளில் பர்தா மற்றும் நிகாப் போன்ற முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரே வகுப்பில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது மற்றும் இத்தாலிய மொழியில் ஒருங்கிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் இத்தாலிய மொழியை கற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவது தொடர்பான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மெலோனி இந்த அறிவிப்பை தனது கட்சியின் இளைஞர் அணியினர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வெளியிட்டுள்ளார். பாடசாலைகளில் மாணவர்கள் முகத்தை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த திட்டம் தற்போது சட்டமாக அமுலுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை. இத்தாலிய அமைச்சரவை நடவடிக்கையை முன்வைத்த பின்னர், அதனை சட்டமாக்குவதற்கு பாராளுமன்ற நடைமுறைகள் இடம்பெற வேண்டியுள்ளது.
மேலும், வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு எவ்வளவு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என்பது குறித்து மெலோனி இதுவரை குறிப்பிட்ட தொகையை வெளியிடவில்லை. இத்தாலிய பாடசாலைகளில் தற்போது மாணவர்களில் சுமார் 11.6% பேர் இத்தாலிய குடியுரிமை இல்லாதவர்கள் என ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் இத்தாலியில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





