தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார். முதல் விருப்ப வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறாததால், இரண்டாம் விருப்ப வாக்குகளும் எண்ணப்பட்டன.
அதன்படி, இரண்டாம் விருப்ப வாக்குகளுடன் இணைத்து 5,740,179 வாக்குகளைப் பெற்று அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டதுடன், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, “ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் மக்கள் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் பல்வேறு விமர்சனங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





