ஜானகி சிறிவர்தனவுக்கு ஒக்டோபர் 6 வரை விளக்கமறியல்

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவான CIABOC அவரை இன்று கைது செய்திருந்தது.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) காணியை க்ரிஷ் நிறுவனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாக ஜானகி சிறிவர்தன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக CIABOC விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தி தெரிவிக்கிறது.

குறிப்பு: இவை விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுகளாகும். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு முன்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியாது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore