பாடசாலை என்பது பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கான இடமாக மாத்திரம் அமையக்கூடாது எனவும், மாணவர்களிடம் தலைமைத்துவம், குழு உணர்வு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களை வளர்க்கும் முக்கியமான இடமாகத் திகழ வேண்டும் எனவும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஆனந்த சாஸ்திராலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் நேற்று (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் பாடத்துறை மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வகுப்பு ரீதியான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.
பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு மாத்திரமன்றி, விளையாட்டு, கலை மற்றும் ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களின் ஆற்றல்களையும் அடையாளம் கண்டு உரிய அங்கீகாரம் வழங்குவது அவசியம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, உயர்தர வகுப்புகளில் ஆண் மாணவர்கள் பாடசாலைக் கல்வி முறைமையிலிருந்து படிப்படியாக விலகிச் செல்வது தொடர்பில் கவனம் செலுத்திய அவர், இதற்கான காரணங்களை ஆழமாக ஆராய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களுக்குத் தேவையான அன்பு, பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்வதற்கான திறன்களைப் பாடசாலைகள் வழங்க வேண்டும் எனவும், மாணவர்கள் தொடர்ந்து பாடசாலையில் கல்வி கற்கக்கூடிய வகையில் கவர்ச்சிகரமானதும் ஆதரவளிக்கக்கூடியதுமான கற்றல் சூழலை உருவாக்குவது பாடசாலைக் கட்டமைப்பின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்வாய்ப்புத் துறைகளும் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், கல்வி என்பது புத்தக அறிவிற்கோ அல்லது டிஜிட்டல் சாதனங்களுக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் ஆற்றலையும் சமூகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் திறனையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்கால உலகில் வெற்றிபெறுவது கடினமாகிவிடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் கே. கமல் திலகரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர நகர முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்





