சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தவர்களால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026.11.03ஆம் திகதி, சம்மாந்துறையில் ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர். இதன்போது, போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் அவர்கள் மோதியதில் குறித்த உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும், அவர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கிய பெற்றோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நம்பிக்கையாளர் சபையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்:
- சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்துவதையும், தலைக்கவசம் அணியாமல் வேகமாகப் பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- இரண்டு பேருக்கு மேற்பட்டோர் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணிப்பதையும், தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்குவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
- போக்குவரத்து விதிகளையும், போக்குவரத்துப் பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மீறி வாகனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளைத் தொந்தரவு செய்யும் நோக்கத்திலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ மோட்டார் சைக்கிள் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பெற்றோர்களுக்கு விசேட வேண்டுகோள்!
அன்பான பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தும்போது போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றார்களா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
பிறருக்கு ஆபத்தையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் செலுத்துவதால், உங்கள் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கும் சட்டரீதியான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைப் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பையும், சமூக ஒழுங்கையும் உறுதிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நம்பிக்கையாளர் சபை
பெரிய பள்ளிவாசல்,
சம்மாந்துறை.






