பெரும் வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், பரகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா (Santiago Peña) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பரகுவேயின் வேகமாக வளர்ந்து வந்த டிஜிட்டல் வங்கிகளில் ஒன்றான Ueno Bank நிதி நெருக்கடியால் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்களால் தமது வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததுடன், ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு கோரி எதிர்க்கட்சியினரும் போராட்டக்காரர்களும் அழுத்தம் கொடுத்தனர்.
வங்கி நெருக்கடியும் அரசியல் அழுத்தமும்
குறைந்தபட்ச நிதி உறுதிப்பாட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கண்டறிந்த பரகுவேயின் மத்திய வங்கி, Ueno Bank தலையிட்டு அதன் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றது.
சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றிய இந்த வங்கி, அரச நிறுவனங்களின் சுமார் 850 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் நிர்வகித்து வந்துள்ளது. இதனால் அரச நிதி மற்றும் ஓய்வூதியப் பணங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், வங்கியின் முன்னாள் உரிமையாளருடன் ஜனாதிபதி பென்யாவுக்கு முன்னர் இருந்த வணிகத் தொடர்புகள் காரணமாக நலன் முரண்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என ஜனாதிபதி மறுத்துள்ளார்.
எட்டு வங்கி அதிகாரிகள் கைது
வங்கி வீழ்ச்சி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அந்த வங்கியுடன் தொடர்புடைய எட்டு நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆளும் கொலராடோ கட்சியின் (Colorado Party) சில உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டமை அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பதவி விலகல் தொடர்பான காணொளி உரையில், தேசிய ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக பென்யா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி
ஜனாதிபதி சாண்டியாகோ பென்யாவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பெட்ரோ அலியானா (Pedro Alliana) அடுத்த ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று, 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும் தற்போதைய பதவிக்காலத்தை நிறைவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வங்கி வீழ்ச்சி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





