உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முக்கியத் தூதரும், ரஷ்யாவின் அரச இறைமைச் செல்வ நிதியத்தின் தலைவருமான கிரில் டிமிட்ரியேவை (Kirill Dmitriev) வியாழக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஒப்பந்தம் உக்ரைனை மட்டும் உள்ளடக்கியதாக இருக்காது என்றும், ஐரோப்பாவின் பல நாடுகளையும் அல்லது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கியதாக அமையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும். உக்ரைனைத் தாண்டி பல தரப்புகளை உள்ளடக்கும். ஐரோப்பா முழுவதையும் கூட உள்ளடக்கியிருக்கலாம். இது மிகப்பெரிய, சிறப்பான ஒப்பந்தமாக இருக்கும். அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம், அதில் பங்கேற்கவுள்ள நாடுகள் அல்லது நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. இதனால், ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களில் இந்த அறிவிப்பு தொடர்பாக தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவுக்கான புதிய பாதுகாப்புக் கட்டமைப்பு
ட்ரம்பின் மருமகனும் அவரது ஆலோசகருமான ஜாரெட் குஷ்னரும் (Jared Kushner), ஐரோப்பாவுக்கான விரிவான பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்றின் அவசியம் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையிலான பாதுகாப்புக் கவலைகளைத் தீர்ப்பதற்கும், எதிர்கால மோதல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், நிலையான மற்றும் கணிக்கக்கூடிய பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதற்கும் விரிவான பாதுகாப்புக் கட்டமைப்பு தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவும் ரஷ்யாவும் நிலையான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நம்பிக்கையின்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முரண்பாடுகள் இதற்குச் சவாலாக இருப்பதாகவும் குஷ்னர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யா மற்றும் ஐரோப்பா இடையே இராணுவ வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் பதற்றத்தைத் தணிப்பதற்கான பரஸ்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், குஷ்னரின் இந்தக் கருத்துகள் ஐரோப்பாவின் சில நாடுகளில் கவலையை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் (NATO) இராணுவப் பிரசன்னத்தையே பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக ரஷ்யா நீண்டகாலமாகக் குறிப்பிட்டு வருகின்றது.
செலென்ஸ்கி எச்சரிக்கை
அமெரிக்கா முன்வைத்துள்ள புதிய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பில் தமக்கு முழுமையான விபரங்கள் தெரியாது என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
CNN ஊடகத்துக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவது எளிதான விடயமல்ல என்றும், அது ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
வியாழக்கிழமை ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டபோதே, இவ்வாறான புதிய பாதுகாப்புக் கட்டமைப்பு குறித்து தாம் அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளே முதலில் இடம்பெற வேண்டும் என்றும், அதன் பின்னரே பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
அபுதாபியில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை
இதற்கிடையில், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, அமெரிக்கா, உக்ரைன், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்றதாக நேட்டோ பேச்சாளர் அலிசன் ஹார்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் போரை நியாயமானதும் நிலையானதுமான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், கலந்துரையாடல்களின் மேலதிக விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜேர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸுடனும் வியாழக்கிழமை தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் முக்கிய ஐரோப்பியத் தலைவர்களில் ஒருவரான மெர்ஸுடனான உரையாடலில், புதிய பாதுகாப்பு யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜேர்மன் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் தொடரும் நிலையில் புதிய முயற்சி
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள ட்ரம்ப், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். எனினும், ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொன்பாஸ் பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும், உக்ரைனின் இராணுவப் பலத்தைக் குறைக்க வேண்டும், நேட்டோவில் இணைவதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்வைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனைகள் ரஷ்யா உண்மையான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதைக் காட்டுவதாக உக்ரைன் தரப்பு கருதுகிறது.
இவ்வாறான சூழலில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளுடன் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் உள்ளடக்கிய புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் ட்ரம்பின் முயற்சி எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்பது குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் திரும்பியுள்ளது.





