ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பச்சை குத்துதல் (Tattoos) மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும், தீவிர குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் தகவல்கள் மற்றும் விடயங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (நவம்பர் 09) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதன்படி, சர்ச்சைக்குரிய இரு ஏற்பாடுகளையும் சட்டமூலத்திலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





