போலந்தில் ஆறு பேரைக் கொன்ற துப்பாக்கிதாரி மருத்துவமனையில் உயிரிழப்பு – பயங்கரவாத விசாரணை தீவிரம்!

போலந்தின் கிராகோவ் (Kraków) நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய நபர், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையின்போது காயமடைந்த நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 09) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக மாலோபோல்ஸ்கா பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

உள்ளூர் ஊடகங்கள் சந்தேகநபரை 24 வயதுடைய மிச்சல் ஓ (Michal O) என அடையாளப்படுத்தியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலி; 17 பேர் காயம்

கடந்த சனிக்கிழமை பிற்பகல் கிராகோவ் நகரின் பழைய நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சந்தைச் சதுக்கத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் தனது வாகனத்தை அதிவேகமாகச் செலுத்தி மக்கள் அதிகம் கூடும் பகுதிக்குள் நுழைந்த பின்னர், இராணுவப் பாணியிலான ஆடைகளையும் குண்டு துளைக்காத கவசத்தையும் அணிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பிரித்தானியப் பிரஜை ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பிரித்தானியா, ஆஸ்திரியா, ஜேர்மனி, போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். மேலும், இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் குடும்பத்தினர் மூவர் உயிரிழந்த நிலையில் மீட்பு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மூவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சந்தேகநபரின் 53 வயதுடைய தந்தை, 52 வயதுடைய தாய் மற்றும் 21 வயதுடைய சகோதரி எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அவர்கள் உயிரிழந்தமைக்கான முழுமையான காரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆறு பேரைக் கொலை செய்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலந்து தேசிய வழக்குத் தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தீவிர வலதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்ததாகவும், தீவிர தேசியவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மார்சின் கியர்வின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவத்தின்போது சந்தேகநபர் அணிந்திருந்த ஆடைகளில் பல்வேறு சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்பட்டதாகவும், அவை தொடர்பில் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் உள்துறை அமைச்சின் பேச்சாளர் கரோலினா கலெக்கா தெரிவித்துள்ளார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அந்த அடையாளங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் தேசிய துக்கம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலந்தில் இரண்டு நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பான நாடாகக் கருதப்படும் போலந்தில் இடம்பெற்றுள்ள இந்த அரிய வகை பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அந்நாட்டில் தீவிரவாதக் கொள்கைகள் பரவி வருவது தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் பல பாடசாலைகளில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவங்களும், இணையத்தில் பரவும் தீவிரவாத உள்ளடக்கங்களுடன் தொடர்புடையதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், கிராகோவ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore