பசிபிக் பெருங்கடலில் 9 மணிநேரம் உயிருக்கு போராடிய கப்பல் ஊழியர் – மீனவர்களால் உயிருடன் மீட்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில், சுமார் 9 மணிநேரம் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சொகுசுக் கப்பல் ஊழியர் ஒருவர் மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ராயல் கரீபியன் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Ovation of the Seas’ என்ற சொகுசுக் கப்பலில் பணியாற்றும் பியானோ இசைக் கலைஞரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவின் கேடலினா தீவுக்கு அருகில், கரையிலிருந்து சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது இரு மீனவர்கள் அவரைக் கண்டுள்ளனர்.

கிராண்ட் காரெட் மற்றும் சீன் நார்டன் ஆகிய இரு மீனவர்களே அவரைக் கண்டறிந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

9 மணிநேரம் கடலில் தத்தளித்த ஊழியர்

குறித்த நபர் எவ்வாறு கடலில் விழுந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவர் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கப்பலில் இருந்து கடலில் விழுந்திருக்கலாம் என நியூபோர்ட் பீச் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மீனவர்கள் அவரைக் கண்டுபிடித்தபோது சுமார் 9 மணிநேரம் அவர் கடலில் தத்தளித்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

குறித்த நபரைக் கண்டவுடன் படகை நிறுத்தி, மீன்பிடி உபகரணங்களை ஒதுக்கிவிட்டு அவரை மீட்க நடவடிக்கை எடுத்ததாக மீனவர் கிராண்ட் காரெட் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட நபர், தான் உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை என்றும், தன்னை மீட்டவர்களிடம் நன்றி தெரிவித்ததாகவும் மற்றொரு மீனவரான சீன் நார்டன் கூறியுள்ளார்.

சீரான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதி

மீட்கப்பட்ட நபர் உடனடியாக நியூபோர்ட் பீச் உயிர்காப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், தற்போது சீரான உடல்நிலையில் இருப்பதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கடலோரக் காவல்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தனது பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. எனினும், அவர் ‘Ovation of the Seas’ கப்பலில் பியானோ இசைக் கலைஞராகப் பணியாற்றுவதாக மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைக்க உதவிய கடல் வெப்பநிலை?

இந்தச் சம்பவத்தில் அவர் நீண்ட நேரம் கடலில் உயிருடன் இருந்ததற்கு அப்பகுதியின் வழக்கத்திற்கு மாறான அதிக கடல் வெப்பநிலை உதவியிருக்கலாம் என மீனவர் சீன் நார்டன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற கடற்பகுதியில் நீரின் வெப்பநிலை சுமார் 24 பாகை செல்சியஸாக இருந்ததாகவும், வேறு ஆண்டுகளில் இத்தகைய சூழ்நிலையில் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தற்போது பதிவுகளில் காணப்பட்ட மிக வலுவான நிலையை எட்டியுள்ளதாக அதனை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்பகுதியின் நீரின் வெப்பநிலை வழக்கமான சராசரியை விட சுமார் 3.05 பாகை செல்சியஸ் அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பாக பிபிசிக்கு கருத்துத் தெரிவித்த ராயல் கரீபியன் குழுமத்தின் பேச்சாளர், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு இந்தக் கடினமான சூழ்நிலையில் தேவையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழியரின் தனியுரிமையைக் கருத்திற்கொண்டு மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் ஒன்பது மணிநேரம் பசிபிக் பெருங்கடலில் தத்தளித்த பின்னரும் குறித்த ஊழியர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore