எகிப்தின் கீசா (Giza) மாகாணத்தில் இரு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 112 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 08ஆம் திகதி, கெய்ரோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-அய்யாத் (Al-Ayyat) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கீசாவிலிருந்து பாயூம் (Fayoum) நோக்கிப் பயணித்த ரயில், கெய்ரோவிலிருந்து தெற்கிலுள்ள அஸ்வான் (Aswan) நோக்கிச் சென்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னால் சென்ற ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக எகிப்தின் பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதியும் உயிரிழந்தவர்களில் ஒருவர்
இந்த விபத்தில் உயிரிழந்த ஏழு பேரில் ரயில் சாரதி ஒருவரும் அடங்குவதாக எகிப்தின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 112 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலருக்கு கை, கால் எலும்பு முறிவுகள், இடுப்பு மற்றும் முதுகெலும்புப் பாதிப்புகள் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக 70க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 45 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
ரயில் விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எகிப்தின் பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் விபத்து தொடர்பில் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதன்போது, சேதமடைந்த ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள் மற்றும் சம்பவ இடத்தின் ஏனைய பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
மேலும், ரயில் இயக்க நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பதையும் விசாரணையாளர்கள் ஆராயவுள்ளனர்.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி, விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய அவசர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அலட்சியம் நிரூபிக்கப்படும் தரப்பினரைப் பொறுப்புக்கூறச் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
தொடரும் ரயில் விபத்துகள் – பாதுகாப்பு குறித்து கவலை
எகிப்தில் ரயில் விபத்துகள் இடம்பெறுவது புதிதல்ல என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு அலெக்சாண்ட்ரியா நகருக்கு அருகில் இரு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதேபோன்று, 2002ஆம் ஆண்டு கீசா மாகாணத்தில் கெய்ரோவிலிருந்து லக்சர் நோக்கிப் பயணித்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இது எகிப்தின் மிக மோசமான ரயில் அனர்த்தங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் முதன்முதலில் ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்திய நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். தற்போது சுமார் 11 கோடி மக்கள் அந்நாட்டின் ரயில் போக்குவரத்து வலையமைப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும், பல பில்லியன் டொலர் முதலீடுகள் வீதிகள் மற்றும் அதிவேக ரயில் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பழமையான ரயில்வே உட்கட்டமைப்பின் பெரும்பகுதி இன்னும் நவீனமயப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில், அண்மைய விபத்து எகிப்தின் ரயில் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.





