பிரேசிலில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஏரிக்குள் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பார்ரா மான்சா (Barra Mansa) நகராட்சியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு குழந்தை, இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை வேளையில் ஏரியைக் கடந்து சென்ற ஒருவர், நீரில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் கார் காணப்படுவதைக் கவனித்து அவசர சேவையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினரால் காருக்குள் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, விசேட நீர்மூழ்கி மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கியதாலேயே மரணமடைந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பார்ரா மான்சா நகரை அண்டியுள்ள வோல்டா ரெடோண்டா (Volta Redonda) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் மற்றும் கார் எவ்வாறு ஏரிக்குள் சென்றது என்பது இதுவரை தெளிவாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உள்ளூர் ஊடகமொன்றின் தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஒரு தம்பதியினர், அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் மருமகள் ஒருவர் ஆகியோர் அடங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த தம்பதியினரின் மகன், இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மே மாதம் பிரேசிலின் பாஹியா மாநிலத்தில் இடம்பெற்ற மற்றுமொரு கோரமான வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்திருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்டமொன்றில் கலந்துகொண்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த லொறியுடன் வேன் நேருக்கு நேர் மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
அந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்ததுடன், லொறியின் சாரதியும் காயமடைந்திருந்தார். அவர் மீது கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.





