அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தும் தனது நிர்வாகத்தின் கொள்கை மிகவும் கடுமையாக இருந்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்து வரும் சில குடியேற்றவாசிகள் அங்கு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியினருடன் உடன்பாட்டை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, CBS தொலைக்காட்சியின் பிரபலமான ‘60 Minutes’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தனது நாடு கடத்தல் கொள்கை அளவுக்கு அதிகமாகக் கடுமையாக இருந்ததா எனக் கேட்கப்பட்டபோது, “அது மிகவும் கடுமையாக இருந்ததாக நான் நினைக்கிறேன். ஆம், அது அளவுக்கு அதிகமாகக் கடுமையாக இருந்திருக்கலாம்” என அவர் பதிலளித்துள்ளார்.
ட்ரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை இந்தக் கருத்து வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவான ICE அதிகாரிகள் பணியிடங்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின்போது குற்றப் பின்னணி இல்லாதவர்களும் கைது செய்யப்பட்டதாகவும், குடும்பங்கள் பிரிக்கப்பட்டதாகவும், குடியேற்ற சமூகங்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த ஆண்டில் மினசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் பகுதியில் இடம்பெற்ற குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளின்போது, ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகிய இரண்டு அமெரிக்கப் பிரஜைகள் கூட்டாட்சி அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தனது குடியேற்றக் கொள்கை சில வகையில் நன்மையையும் சில வகையில் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதற்கும் மக்கள் பாராட்டுத் தெரிவித்தாலும், சிறிய சட்ட மீறல்களுக்காகவும் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காகவும் நல்ல வேலைவாய்ப்புகளைக் கொண்டிருந்தவர்களும் நாடு கடத்தப்பட்டமை விமர்சனங்களுக்கு வழிவகுத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்து, வேலை செய்து, வரி செலுத்தி வரும் சிலர் அங்கு தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நாட்டில் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அமெரிக்காவில் 10 அல்லது 15 ஆண்டுகளாக வசித்து வரும் குடியேற்றவாசிகள் தொடர்பில் ஜனநாயகக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்ட முடியும் என ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, கொலை, பாலியல் வன்முறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தொடர்ந்து நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இங்கு 10 அல்லது 15 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்காக ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தலாம். அது பேச்சுவார்த்தை மூலம் சாத்தியமாகும்” என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
இந்த உடன்பாட்டை எட்டுவதற்காக ஜனநாயகக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், கட்சியினரிடமிருந்து சிலர் ஏற்கனவே தன்னைத் தொடர்புகொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதே நேர்காணலில் ஈரானுடனான போர், எரிபொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவையும் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்குப் பங்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நியாயமானது என்றும், ஈரான் அணுவாயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதற்காக அதே முடிவை மீண்டும் எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தலுக்குப் பின்னர் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கம் தமக்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் சாதனைகளை மக்களிடம் சரியாக எடுத்துரைக்கத் தவறியிருக்கலாம் என்றும், அது தனது நிர்வாகத்தின் தகவல் பரிமாற்றக் குறைபாடாக இருக்கலாம் என்றும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் தாம் எதிர்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அதேவேளை அமெரிக்கா தொழில்நுட்பப் போட்டியில் பின்தங்கிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.





