சம்மாந்துறை ஏத்தாளைக்குளம் வித்தியாலயத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நிறைவு!

சம்மாந்துறை ஏத்தாளைக்குளம் GMMS பாடசாலையின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (07) பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி. ரசாக் தலைமையில், அல் மர்ஜான் பெண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பெற்றோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், சித்திக்கு அண்மித்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும், சமகாலத்தில் சமூக வலைத்தளங்களில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவைக் காணொளிகளைப் பதிவு செய்து வரும் மருதமுனை ‘வாங்க பழகலாம்’ அணியினரின் நாடக நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர் எம்.ஏ.சி. ரசாக் “இலைமறை காயாக இருந்த ஏத்தாளைக்குளம் வித்தியாலயம் இன்று அதன் கல்விச் சாதனைகளின் பலனை அறுவடை செய்யத் தயாராகியுள்ளது. சுமார் 27 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும், இரண்டு மாணவர்கள் சித்திக்கு அண்மித்த புள்ளிகளைப் பெற்றதுடன், ஏனைய மாணவர்களும் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இதன்மூலம் எமது பாடசாலையின் சித்தி விகிதம் 96 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்தச் சாதனை எனது தனிப்பட்ட முயற்சியால் மாத்திரம் கிடைத்ததல்ல. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பாடசாலைக்கு வழங்கிய கௌரவமாகும். எதிர்வரும் ஆண்டில் இதைவிடப் பெரிய சாதனைகளை எமது பாடசாலை படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

அத்துடன், நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியைப் பாராட்டியதுடன், கல்வி முன்னேற்றத்தில் ஆரம்பப் பிரிவின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாடசாலையின் கல்வி வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் அதிபர் சிறந்த முறையில் வழிகாட்டி வருவதாகத் தெரிவித்த அவர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச். நைரூஸ் கான், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம். நயீம், எஸ்.எல். பௌமி, பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore