அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று (10) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டக் கிளைச் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் பங்கேற்கவுள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகளுக்கோ அல்லது நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் வழக்கமான மருத்துவச் சேவைகள் தொடரும் என்றும், இந்தப் போராட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு பணிப்புறக்கணிப்பும் முன்னெடுக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும், அரசாங்கத்திற்கு ஆரம்பகட்ட எச்சரிக்கையை வழங்கும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களும் போராட்டம்
இதேவேளை, தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இணைந்த சுகாதார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தங்களது பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஒரே நாளில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் என இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





