ஒரே பாலின உறவுகளை குற்றமாக்கிய சட்டங்கள் இரத்து; 11 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் வரலாற்றுத் தீர்ப்பு!

கரீபியன் நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஒரே பாலினத்தவர்களுக்கிடையிலான சம்மதத்துடனான தனிப்பட்ட உறவுகளை குற்றமாக்கிய சட்டங்களை பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்து வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய பிரிவி கவுன்சிலின் நீதித்துறை குழு (Judicial Committee of the Privy Council – JCPC), குறித்த சட்டங்கள் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளுக்கு முரணானவை எனத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பு, இரட்டைக் குடியுரிமை கொண்ட 62 வயதான ஜேசன் ஜோன்ஸ் முன்னெடுத்த 11 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் முடிவாக அமைந்துள்ளது.

ஜோன்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் உயர் நீதிமன்றத்தில் இந்தச் சட்டங்களுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தார். எனினும், அத்தீர்ப்பை அந்நாட்டு அரசாங்கம் மேன்முறையீட்டின் மூலம் மாற்றியமைத்திருந்தது. இதனையடுத்து, அவர் பிரிவி கவுன்சிலில் மீண்டும் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஒருமனதாக ஜோன்ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளனர். தீர்ப்பை அறிவித்த நீதிபதி லோர்ட் சேல்ஸ், தனிநபர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கும் சமூகத்தில் இத்தகைய சட்டங்களை நியாயமானவை எனக் கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், ஒரே பாலினத்தவர்களுக்கிடையிலான சம்மதத்துடனான உறவுகளை குற்றமாக்கிய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் கீழ், இத்தகைய உறவுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய நிலை காணப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் மரண தண்டனைக்கான ஏற்பாடுகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டங்கள் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தன. சுதந்திரம் பெற்ற பின்னரும் சில பழைய பிரித்தானிய சட்டங்கள் தொடர்வதற்கு அனுமதிக்கும் சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Savings Law Clauses) காரணமாக, இச்சட்டங்களை மாற்ற முடியாது என டிரினிடாட் மற்றும் டொபாகோவின் சட்டமா அதிபர் தரப்பு வாதிட்டிருந்தது.

எனினும், 1986ஆம் ஆண்டு அரசாங்கம் குறித்த சட்டங்களில் மேற்கொண்ட மாற்றங்கள் காரணமாக அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இனியும் பொருந்தாது என ஜோன்ஸ் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர். மேலும், இச்சட்டங்கள் தனிநபர்களின் தனியுரிமை உரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

தீர்ப்பை வரவேற்ற ஜேசன் ஜோன்ஸ், இந்தச் சட்டங்கள் தமது மக்கள் மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையை ஒருபோதும் பிரதிபலிக்கவில்லை என்றும், LGBTQ+ சமூகத்தினரைத் தமது சொந்த நாட்டிலேயே குற்றவாளிகளாகச் சித்தரித்த நிலைமை இந்தத் தீர்ப்புடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி ஆனந்த் ராம்லோகன், இந்தத் தீர்ப்பை ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள், சமத்துவமான கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கான உரிமை ஆகியவற்றுக்கான வரலாற்று வெற்றியாக வர்ணித்துள்ளார்.

பிரிவி கவுன்சில் ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவது தொடர்பாக வழங்கியுள்ள முதலாவது தீர்ப்பு இதுவாகும். இதனால், பொதுநலவாய அமைப்பின் ஏனைய நாடுகளிலும் காலனித்துவ காலச் சட்டங்களுக்கு எதிராக இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என உரிமை செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore