ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் அமெரிக்க இராணுவத்தின் 41 வயதுடைய மூத்த வீரர் ஒருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளோசெஸ்டர் (Gloucester) நகருக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டம் 2023இன் பிரிவு 1 மற்றும் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த சட்டத்தின் பிரிவு 1, பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பெறுதல் அல்லது வெளியிடுதல் தொடர்பான குற்றங்களைக் குறிப்பிடுகின்றது. பிரிவு 3, வெளிநாட்டு உளவுத்துறை சேவைக்கு உதவுதல் தொடர்பானதாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, குளோசெஸ்டர்ஷையரில் உள்ள இரண்டு இடங்களில் பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர், குளோசெஸ்டர்ஷையரின் இன்ஸ்வொர்த் பகுதியில் அமைந்துள்ள இம்ஜின் இராணுவ முகாமில் (Imjin Barracks) பணியாற்றி வந்ததாக BBC தெரிவித்துள்ளது.
இந்த முகாம், நேட்டோ அமைப்பின் நேச நாடுகளுக்கான விரைவு எதிர்வினைப் படையின் (Allied Rapid Reaction Corps – ARRC) தலைமையகமாகச் செயற்படுகின்றது. இது நேட்டோவின் முக்கியமான இராணுவ நடவடிக்கைத் தளங்களில் ஒன்றாகும்.
இந்தக் கைது நடவடிக்கை வேறு எந்தவொரு தற்போதைய விசாரணையுடனும் தொடர்புடையதல்ல என பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க FBI பணிப்பாளர் காஷ் பட்டேல் வெளியிட்ட அறிக்கையில், உளவு நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மிகுந்த கவலையளிக்கும் விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் அதன் கூட்டாளி நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு FBI ஒருபோதும் சகிப்புத்தன்மை காட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸின் துணை உதவி ஆணையாளர் விக்கி எவன்ஸ், இந்தக் கைது நடவடிக்கையை முக்கியமானதாகக் குறிப்பிட்டதுடன், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெயர் வெளியிடப்படாத குறித்த இராணுவ வீரர் தற்போது லண்டனில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் அதிகபட்சமாக 14 நாட்கள் வரை அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் எதிர் உளவுப் பிரிவுத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சீன் ஸ்டின்சன், முக்கியமான தகவல்களைக் கையாளும் பொறுப்பில் இருந்த மூத்த இராணுவ வீரர் ஒருவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு, உள்நாட்டிலிருந்தே ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் காணப்படுவதை நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை குறித்த இராணுவ வீரருக்கு எதிராக உத்தியோகபூர்வ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.





