காசாவின் கமால் அத்வான் வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவின் உடல்நிலை குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன. இஸ்ரேலிய சிறையில் சுமார் 23 மாதங்களாக எவ்வித உத்தியோகபூர்வ குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்த சுயாதீன இஸ்ரேலிய மருத்துவ நிபுணர் பேராசிரியர் அமித் டிரோஷ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு – இஸ்ரேல் (PHRI) பெற்றுக்கொண்ட மருத்துவ ஆவணங்களை அவர் ஆய்வு செய்துள்ளார்.
டாக்டர் ஹுசாம் அபு சஃபியா 2024 டிசம்பர் 27ஆம் திகதி தனது பணியிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், ரகெபெட் (Rakefet) எனப்படும் நிலத்தடி சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி மாதத்தில் 90 கிலோகிராமாக இருந்த அவரது உடல் எடை, 2026 மே மாதத்தில் 76 கிலோகிராமாகக் குறைந்துள்ளதாக மருத்துவப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, சுமார் 14 கிலோகிராம் உடல் எடையை அவர் இழந்துள்ளார்.
தொடர்ச்சியான உணவுப் பற்றாக்குறை, உடல் எடை குறைவு, மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உள்ளாகுதல், காயங்கள் மற்றும் போதிய மருத்துவப் பராமரிப்பு இன்மை ஆகியவை அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என பேராசிரியர் அமித் டிரோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி தொடர்பில் போதிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை, சிரங்கு நோய்க்கான சிகிச்சையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தமை ஆகியவை மருத்துவ ரீதியாகக் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 பெப்ரவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துள்ளமை, உடல் எடை குறைந்ததை மட்டும் காரணமாகக் கொண்டு விளக்க முடியாத விடயம் என்றும், சிறையில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியுடன் இது தொடர்புபட்டிருக்கலாம் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
2026 ஜூலை மாத மருத்துவப் பதிவுகளில், அவரது ஒரு கண்ணைச் சுற்றி காயங்கள், தலைச்சுற்றல் மற்றும் விலா எலும்புப் பகுதியில் வலி காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக அவர் தனது சட்டத்தரணிகளிடம் தெரிவித்திருந்தாலும், குறித்த காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பது மருத்துவப் பதிவுகளில் தெளிவாக விளக்கப்படவில்லை.
இந்த நிலையில், டாக்டர் அபு சஃபியாவுக்கு சுயாதீன மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை இஸ்ரேலிய மாவட்ட நீதிமன்றம் கடந்த வார இறுதியில் நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர், அவரை விடுவிக்கக் கோரிய மனுவையும் இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இஸ்ரேலிய அதிகாரிகள் அவரை “சட்டவிரோதப் போராளி” (Unlawful Combatant) என வகைப்படுத்தியுள்ளனர். இதே வகைப்பாட்டின் கீழ் 375க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகைப்பாடு விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு இஸ்ரேல் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
டாக்டர் அபு சஃபியாவுக்கு சுயாதீன மருத்துவப் பரிசோதனை வழங்கப்பட வேண்டும் என்றும், அவரது முழுமையான மருத்துவப் பதிவுகளை மூன்றாம் தரப்பு மருத்துவ நிபுணர் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் PHRI வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை, தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இஸ்ரேல் அரசை அவமதிக்கும் நோக்கிலான பரந்த பிரசாரத்தின் ஒரு பகுதி எனத் தெரிவித்துள்ளது. மேலும், சிறைச்சாலை நிர்வாகம் சட்டத்திற்கு அமைவாகவும் தொடர்ச்சியான நீதித்துறை மேற்பார்வையின் கீழும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
டாக்டர் அபு சஃபியா கைது செய்யப்படுவதற்கு முன்னர், காசாவின் வடபகுதியில் உள்ள கமால் அத்வான் வைத்தியசாலையில் கடுமையான முற்றுகை மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் 80 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையின் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.
அவரது மகன் இப்ராஹிம், 2024 ஒக்டோபர் மாதம் வைத்தியசாலை நுழைவாயிலில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். மகனின் நினைவாக அவர் அணிந்திருந்த வெள்ளை மருத்துவ அங்கியைத் துவைக்க மறுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PHRI அமைப்பின் பிரதிநிதி நாஜி அப்பாஸ் தெரிவிக்கையில், காசாவின் சுகாதாரக் கட்டமைப்புக்கு மருத்துவப் பணியாளர்கள் மிகவும் அவசியமான நிலையில், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் மற்றும் முக்கிய மருத்துவத் துறைகளைச் சேர்ந்த 14 பலஸ்தீன மருத்துவர்கள் இன்னமும் குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணையின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், டாக்டர் அபு சஃபியாவின் குடும்பத்தினரால் இதுவரை அவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





