மிரிஸ்ஸாவில் இலங்கைச் சுற்றுலா வழிகாட்டியை கடலில் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள்; வைரலான காணொளியின் பின்னணி என்ன?

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள மிரிஸ்ஸா கடற்பகுதியில், இலங்கைச் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் படகிலிருந்து கடலுக்குள் தள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 8ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது நீண்டகால நட்புறவைக் கொண்ட இரு தரப்பினருக்கிடையிலான நீர் விளையாட்டின்போது இடம்பெற்ற சம்பவம் என பாதிக்கப்பட்டவரின் சகோதரர் விளக்கமளித்துள்ளார்.

ரஷ்ய அரச ஊடகமான RT தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தக் காணொளியைப் பகிர்ந்து, இலங்கைத் தொழிலாளி ஒருவர் படகிலிருந்து கடலுக்குள் தள்ளப்படுவதை இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சிரித்தபடி காணொளியாகப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.

எனினும், சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இது வெறும் விளையாட்டுக்காக இடம்பெற்ற சம்பவம் என்றும், இலங்கை வழிகாட்டியை அவமதிக்கும் அல்லது காயப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான டேனியல் அம்ரம் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சகோதரர் தெரிவித்தது என்ன?

இந்தச் சம்பவம் தொடர்பில் BBC சிங்கள சேவை மேற்கொண்ட விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட சுற்றுலா வழிகாட்டி செனுர ரஷ்மிகாவின் சகோதரர் கவிந்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு முதல் குறித்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் தங்களுக்கு நெருங்கிய பழக்கம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களது உணவகத்தை அமைப்பதற்கும் படகுகளை வாங்குவதற்கும் அந்தக் குழுவினர் உதவியதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வருகை தரும் அவர்கள் தங்களுடன் சகோதரர்களைப் போன்ற உறவைப் பேணி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது, இரு தரப்பினரும் படகில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், முதலில் தனது சகோதரர் சுற்றுலாப் பயணிகளைத் தள்ளியதைத் தொடர்ந்து அவர்கள் அவரையும் கடலுக்குள் தள்ளியதாகவும் கவிந்து தெரிவித்துள்ளார்.

மேலும், தானும் கடலுக்குள் தள்ளப்பட்டதாகவும், பின்னர் அனைவரும் மீண்டும் படகில் ஏறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் விளையாட்டின் ஒரு பகுதியாகக் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஒரு குழுவில் பகிரப்பட்டதாகவும், அந்தக் குழுவில் இருந்த ஒருவர் காணொளியை வெளியிட்டதன் காரணமாகவே இது பெரிய சர்ச்சையாக மாறியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியின் விளக்கம்

சம்பவத்திற்குப் பின்னர் செனுர ரஷ்மிகா பதிவு செய்த காணொளி ஒன்றையும் அவரது சகோதரர் BBC-க்கு வழங்கியுள்ளார்.

அதில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்றிருந்தபோது சிறியதொரு சம்பவம் இடம்பெற்றதாகவும், இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் நீண்டகாலமாகத் தங்களது நண்பர்களாக இருப்பதாகவும், அவர்கள் தங்களை நல்ல முறையில் நடத்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியின் முழுமையான, திருத்தப்படாத பதிப்பைப் பெற BBC முயற்சித்த போதிலும் அதனைப் பெற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்

குறித்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியின் செயற்பாடு குறித்து இலங்கை மற்றும் சர்வதேச சமூக ஊடகப் பயனர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

கடலின் நடுவே ஒருவர் திடீரென நீருக்குள் தள்ளப்படுவது சாதாரண விளையாட்டாகக் கருதப்பட முடியாது என்றும், படகின் இயந்திரத்தில் சிக்குதல் அல்லது நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இதேபோன்ற செயல் வேறு நாட்டில் இடம்பெற்றிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பியுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணை

சமூக ஊடகங்களில் காணொளி பரவியதைத் தொடர்ந்து, கொட்டவில பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு அழைத்துச் சென்றதாகவும், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் விளையாட்டுக்காகவே இச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கவிந்து கூறியுள்ளார்.

குறித்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வழிகாட்டியின் நண்பர்கள் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் கொட்டவில பொலிஸ் பேச்சாளர் BBC சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் இரு தரப்பினரின் விளக்கங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore