1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி, சோவியத் ஒன்றியம் லைக்கா என்ற தெருநாயை விண்வெளிக்கு அனுப்பியது. பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் உயிரினம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த அந்த நாய், மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றிய லைக்காவின் வாழ்க்கை, இன்றும் ஒரு சோகமான வரலாறாக நினைவுகூரப்படுகிறது.
பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே விண்வெளி ஆராய்ச்சியில் கடும் போட்டி நிலவியது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னர், அங்கு நிலவும் சூழலில் உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள சோவியத் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
இதற்காக மாஸ்கோவின் தெருக்களில் அலைந்து திரிந்த கலப்பினத் தெருநாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் லைக்கா.
விண்வெளிக்கான பயணம் எவ்வாறு தொடங்கியது?
1957 ஒக்டோபர் 4ஆம் திகதி, உலகின் முதலாவது செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1ஐ சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யப் புரட்சியின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மற்றுமொரு விண்வெளிச் சாதனையை நிகழ்த்த வேண்டும் என அப்போதைய சோவியத் தலைவர் நிகிதா குருஷ்சேவ் உத்தரவிட்டார்.
இதற்காக விண்வெளியில் உயிரினத்தை அனுப்பும் திட்டம் அவசரமாக முன்னெடுக்கப்பட்டது. சோவியத் விண்வெளித் திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர் செர்கெய் கொரோலேவ் தலைமையில் விஞ்ஞானிகள் பணியாற்றினர்.
குறுகிய கால அவகாசம் காரணமாக, திட்டத்தை முழுமையாகச் சோதித்து முடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இதன் விளைவாக, லைக்காவை ஏற்றிச் செல்லும் விண்கலம் அவசரமாகத் தயாரிக்கப்பட்டது.
1957 நவம்பர் 3ஆம் திகதி, கஜகஸ்தானில் அமைந்துள்ள பைகனூர் ஏவுதளத்திலிருந்து ஸ்புட்னிக்-2 விண்கலம் மூலம் லைக்கா விண்ணில் செலுத்தப்பட்டது.
லைக்கா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
சோவியத் விஞ்ஞானிகள் விண்வெளிப் பயணத்திற்காக நாய்களைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் இருந்தன.
அமெரிக்கா ஏற்கனவே பழ ஈக்கள் மற்றும் குரங்குகளை விண்வெளி ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தியிருந்தது. ஆனால், குரங்குகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் உடலியல் மாற்றங்களைக் கண்காணிப்பதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டதாக சோவியத் விஞ்ஞானிகள் கருதினர்.
நாய்களின் உடலியல் செயல்பாடுகள் குறித்து சோவியத் விஞ்ஞானிகளுக்கு விரிவான அறிவு இருந்தது. ரஷ்ய விஞ்ஞானி இவான் பாவ்லோவின் ஆய்வுகள் இதற்கு முக்கிய அடிப்படையாக அமைந்தன.
மேலும், தெருநாய்கள் கடுமையான சூழல்களிலும் உயிர்வாழும் திறன் கொண்டவை என்பதால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டன. குறிப்பாக, பெண் நாய்கள் கட்டுப்படுத்துவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் எளிதாக இருந்தன. விண்கலத்தின் குறுகிய இடத்திற்குள் பொருந்துவதற்காக அவற்றின் எடை 6 முதல் 7 கிலோகிராமுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
லைக்காவின் உண்மையான பெயர் ‘குட்ரியாவ்கா’ என்பதாகும். ரஷ்ய மொழியில் ‘குரைப்பவள்’ என்ற பொருளைக் கொண்ட லைக்கா என்ற பெயரால் அது பின்னர் பிரபலமானது.
சிறுவனாக இருந்தபோது லைக்காவுடன் விளையாடிய விஞ்ஞானியின் மகன்
சோவியத் விண்வெளித் திட்டத்தின் மருத்துவப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த விளாடிமிர் யாஸ்டோவ்ஸ்கியின் மகன் விக்டர் யாஸ்டோவ்ஸ்கி, தனது சிறுவயதில் லைக்காவுடன் விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
லைக்கா விண்ணில் ஏவப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனது தந்தை அதனை மாஸ்கோவுக்கு அருகிலிருந்த பாட்டியின் வீட்டுக்கு அழைத்து வந்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அப்போது ஒன்பது வயதாக இருந்த தானும் தனது சகோதரிகளும் லைக்காவுடன் விளையாடியதாகவும், அது மிகவும் அமைதியானதும் அன்பானதுமான நாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லைக்காவுக்கு ஆழமான கருநிறக் கண்கள் இருந்ததாகவும், அது மிகவும் புத்திசாலித்தனமான நாய் எனக் கருதப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியில் லைக்காவுக்கு என்ன நடந்தது?
லைக்காவை விண்வெளிக்கு அனுப்பியபோது, அந்தப் பயணத்திலிருந்து உயிருடன் மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பம் சோவியத் விஞ்ஞானிகளிடம் இருக்கவில்லை.
விண்கலத்துக்குள் லைக்காவுக்காக அழுத்தக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தாலும், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்பு போதுமான அளவில் தயாரிக்கப்படவில்லை.
இதனால் விண்கலத்துக்குள் வெப்பநிலை அதிகரித்து, லைக்கா உயிரிழந்தது.
நீண்டகாலமாக, லைக்கா பல நாட்கள் விண்வெளியில் உயிருடன் இருந்ததாக சோவியத் அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால், 2002ஆம் ஆண்டு வெளியான தகவல்களின்படி, விண்கலம் ஏவப்பட்ட ஐந்து முதல் ஏழு மணி நேரங்களுக்குள் அதிக வெப்பம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக லைக்கா உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
வெளியிடப்பட்ட விண்வெளி ஆய்வுப் பதிவுகளின்படி, லைக்கா உயிருடன் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்திருந்தது. சுமார் 103 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிவரும் பாதையில் அது பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் எழுந்த எதிர்ப்பு
லைக்காவை மீண்டும் பூமிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அறிந்தே விண்வெளிக்கு அனுப்பிய முடிவு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
பிரித்தானியாவில் விலங்கு நல அமைப்புகள் சோவியத் தூதரகத்திற்கு முன்பாகப் போராட்டங்களை நடத்தின. லைக்காவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாய் வளர்ப்போர் ஒரு நிமிட மௌனம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியேயும் விலங்கு நல ஆர்வலர்கள் தங்களது செல்லப்பிராணிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் விண்வெளி ஆய்வுகளில் விலங்குகளைப் பயன்படுத்துவது தொடர்பான சர்வதேச விவாதங்களையும் தீவிரப்படுத்தியது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணங்களில் விலங்குகளை உயிருடன் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரும் வசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
லைக்காவுக்குப் பின்னர் விண்வெளிக்குச் சென்ற நாய்கள்
லைக்கா உயிரிழந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1960 ஆகஸ்ட் 19ஆம் திகதி பெல்கா மற்றும் ஸ்ட்ரெல்கா என்ற இரண்டு நாய்கள் சோவியத் ஒன்றியத்தால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
அவை பூமியை 17 முறை சுற்றிவந்த பின்னர் மறுநாள் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பின. இதன் மூலம் உயிரினங்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பாதுகாப்பாகக் கொண்டுவர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
விண்வெளி வரலாற்றில் அழியாத பெயர்
லைக்காவின் நினைவாக அஞ்சல் தலைகளும் நினைவு உறைகளும் வெளியிடப்பட்டன. அதன் பெயரில் பல்வேறு பொருட்களும் வெளியிடப்பட்டன.
2008ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் லைக்காவை நினைவுகூரும் வகையில் இரண்டு மீட்டர் உயரமுள்ள சிலையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. அதில் ராக்கெட் மனிதக் கையாக மாறி, அதன் உள்ளங்கையில் லைக்கா நிற்பது போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
லைக்காவின் பயணம், உயிரினங்களும் எடையற்ற விண்வெளிச் சூழலில் வாழ முடியும் என்பதை நிரூபித்து, மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வதற்கான பாதையைத் திறந்ததாக சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
எனினும், லைக்காவைத் தேர்ந்தெடுத்து விண்வெளிப் பயணத்திற்குப் பயிற்றுவித்த சோவியத் விஞ்ஞானி ஓலெக் கசென்கோ, பின்னர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
1998ஆம் ஆண்டு அவர் கூறுகையில், விலங்குகள் மீதான இத்தகைய ஆய்வுகள் தமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகவும், லைக்காவின் உயிரிழப்பை நியாயப்படுத்தும் அளவுக்கு அந்தப் பயணத்திலிருந்து போதுமான அறிவியல் தகவல்களைப் பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மனிதகுலத்தின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதலாவது சுற்றுப்பாதை உயிரினமாக இடம்பிடித்த லைக்கா, அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மட்டுமன்றி, அந்த முன்னேற்றத்திற்காக உயிரிழந்த விலங்குகளின் துயரத்தையும் நினைவூட்டும் பெயராக இன்றும் திகழ்கிறது.





