அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார வாகனங்கள் கட்டாயம்!

கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ பயன்பாட்டுக்காக இனி மின்சாரக் கார்களையே கொள்வனவு செய்ய வேண்டும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவை 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வற்ற நாடாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எரிசக்தி முகமையின் தகவலின்படி, இந்தியாவின் மொத்த கார்பன் உமிழ்வில் போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு சுமார் 12 சதவீதமாகும். அதேவேளை, இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் சுமார் 90 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைக்கவும், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரச துறைகள் தற்போது பயன்படுத்தும் பெற்றோல், டீசல் கார்கள் பழுதடைந்து மாற்றப்படும்போதோ அல்லது பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்போதோ, அவற்றுக்குப் பதிலாக மின்சாரக் கார்களையே கொள்வனவு செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், மின்சார வாகனங்களுக்குப் பதிலாக பெற்றோல் அல்லது டீசல் கார்களைக் கொள்வனவு செய்ய விரும்பும் துறைகள், அதற்கான காரணங்களை விளக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய செலவினத் துறையிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

மேலும், மின்சார வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான அதிகபட்ச விலை வரம்பு 20 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோல், டீசல் மற்றும் இரட்டை எரிபொருள் பயன்பாட்டைக் கொண்ட கலப்பினக் கார்களுக்கான அதிகபட்ச வரம்பு 10 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் கொள்வனவு விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்திற்கொண்டு இந்த வரம்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் இந்திய அரச அலுவலகங்களின் வாகனப் பயன்பாட்டில் மின்சார வாகனங்களை அதிகரிப்பதுடன், நாட்டின் போக்குவரத்துத் துறையில் பசுமை மாற்றத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore