வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் தாய்நாட்டுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், இலவசமாக இரட்டைக் குடியுரிமை வழங்கும் புதிய திட்டமொன்றை அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவின் கீழ், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத்துணைவர்கள், பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை வழித்தோன்றல்களுக்கும் கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக “Global Sri Lankan Heritage Citizen” எனும் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரிடம் காணப்படும் அறிவு, திறமைகள் மற்றும் ஆற்றல்களை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கும் அவர்களின் பூர்வீகத் தாய்நாட்டிற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதும் இம்முன்மொழிவின் மற்றுமொரு நோக்கமாகும்.
இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கான தகைமைகள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் அமுலாக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





