அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் உள்ளிட்ட கல்விசார் வெளியீடுகளைப் பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்குவதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட பொருட்கள் பெறுமதி சேர் வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அதேவேளை, அப்பியாசக் கொப்பிகளும் முன்னதாகவே இவ்வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தையும் அத்தியாவசிய கல்விசார் பொருட்களை பொதுமக்கள் நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் கருத்திற்கொண்டு இந்த வரி விலக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான படப் புத்தகங்கள், சித்திரம் வரைதல் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள், ஏனைய அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவற்றைப் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்த நடவடிக்கையானது கல்வி, அறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் கல்விசார் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள உதவும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.





