2027ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் யாத்திரையில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு 3,500 யாத்திரிகர்களுக்கான ஒதுக்கீட்டை சவூதி அரேபியா வழங்கியுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஹஜ் ஒப்பந்தம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி சவூதி அரேபியாவின் ஜித்தாவில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வருடாந்த ஹஜ் கண்காட்சி மற்றும் மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், இலங்கையின் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின்போது, ஹஜ் யாத்திரைக்கான நடைமுறைகளை மேலும் இலகுபடுத்தி, யாத்திரிகர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கைத் தரப்பினர் எடுத்துரைத்துள்ளனர்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்குத் தேவையான போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கைப் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையிலான குழுவினர், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்பீக் பவ்ஸான் அல்-ரபீஆவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைத் தூதுக்குழுவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார், ஜித்தாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் நீதியரசர் எம்.டி. முஹம்மட் லாபிர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அத்துடன், தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவும் சவூதி அரேபிய அமைச்சினால் நடத்தப்பட்ட விசேட பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றுள்ளது.
இந்தப் பயிற்சிகள் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளின் செயற்பாட்டுத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





