பிரான்ஸின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கலே-ஃப்ரெத்தூன் (Calais-Fréthun) ரயில் நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, லண்டன் – பாரிஸ் இடையிலான யூரோஸ்டார் (Eurostar) ரயில் சேவைகள் உள்ளிட்ட சில சர்வதேச ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, கலே-ஃப்ரெத்தூன் நிலையத்தின் ஊடாக ரயில்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யூரோஸ்டார் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இதனால் லண்டனுக்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் சில ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் பல நாடுகளில் தொடர்ச்சியாகப் போலியான வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பாடசாலைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கடந்த புதன்கிழமை பல பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். வியாழக்கிழமையும் இதேபோன்ற அச்சுறுத்தல்கள் காரணமாகப் பல பாடசாலைகளில் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்திலும் பாடசாலைகளுக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், அயர்லாந்தின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான RTÉ உள்ளிட்ட ஊடக நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உண்மையான ஆபத்து இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலான நடவடிக்கையாக இவை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவரும் சில சைபர் தாக்குதல்கள் மற்றும் இடையூறு நடவடிக்கைகளின் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என சில ஐரோப்பிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஈரானும் மற்றொரு சந்தேகத்துக்குரிய தரப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் பிரான்ஸில் நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அமைப்புகளை இலக்காகக் கொண்டு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் பின்னணியில் ஈரானுடன் தொடர்புடைய குழுவொன்று இருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் இந்தக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.
கலே-ஃப்ரெத்தூன் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன





