காட்டுப் பகுதியில் 6 நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது சிறுவன், பொலிஸ் ஹெலிகொப்டர் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

வில்லியம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த சிறுவன், தனது நண்பருடன் முதன்முறையாக முகாமிடுவதற்காக கடந்த நவம்பர் 6ஆம் திகதி கிழக்கு விக்டோரியாவின் வால்ஹல்லா ஈஸ்ட் (Walhalla East) பகுதிக்குச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் மாலை முகாம் அமைந்திருந்த இடத்திலிருந்து வேறொரு பகுதிக்குச் சென்ற அவர் மீண்டும் திரும்பவில்லை. அத்துடன், தனது கையடக்கத் தொலைபேசி, உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றையும் முகாமிலேயே விட்டுச் சென்றிருந்தார்.

இரண்டாம் நிலை மன இறுக்கக் குறைபாடு (Autism) கொண்ட குறித்த சிறுவனுக்கு கணிசமான ஆதரவு தேவைப்படுவதாகவும், காட்டுப் பகுதியில் வழிதவறியிருக்கலாம் என்றும் பொலிஸார் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார், அவசரகால சேவைப் பிரிவினர் மற்றும் விசேட தேடுதல் குழுவினர் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆறு நாட்களாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை விக்டோரியா பொலிஸின் வான்வழிப் பிரிவினர் ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்டோனி க்ரீக் (Stoney Creek) பகுதிக்கு கிழக்கே சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் காட்டுப் பகுதியில் மீன்பிடி உபகரணப் பெட்டியொன்றைக் கண்டுள்ளனர்.

அந்தப் பகுதியை மேலும் அவதானித்தபோது, அருகிலிருந்த நீரோடைக்கு அருகே சிறுவன் படுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஹெலிகொப்டரிலிருந்து கீழிறங்கிய அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.

ஆறு நாட்களாகக் காட்டில் சிக்கியிருந்த சிறுவன், அந்தப் பகுதியில் கிடைத்த குடிநீரைப் பயன்படுத்தி உயிர்வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் செங்குத்தான ஆற்றங்கரைச் சரிவில் விழுந்த அவர், அதே இடத்தில் இருந்து மீட்புக்காகக் காத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டபோது சிறுவனுக்கு கடுமையான வெயிலால் ஏற்பட்ட தோல் எரிச்சல், கால்களில் காயங்கள் மற்றும் உடல் சோர்வு காணப்பட்டதாகவும், அவரால் நடக்க முடியாத நிலை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் மன உறுதியுடன் காணப்பட்டதுடன், அதிகாரிகளுடன் உரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவன் ஹெலிகொப்டர் மூலம் Cowwarr பகுதியில் அமைந்துள்ள தேடுதல் நடவடிக்கை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தாயாருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

தனது மகன் உயிருடன் மீட்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தாயார் எலிசபெத் பார்க்லி, அவர் நலமாக இருப்பதாகவும், இந்த ஆறு நாட்களும் மிகுந்த மனவேதனையுடன் கழிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், மேலதிக மருத்துவக் கண்காணிப்புக்காக சிறுவன் தனது தாயாருடன் Latrobe Regional வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆறு நாட்களாகத் தொடர்ந்த தேடுதல் நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள், ஹெலிகொப்டரின் உதவி இல்லாமல் சிறுவனைக் கண்டுபிடித்திருப்பது கடினமாக இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore