இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வளைகுடா பகுதியில் அமெரிக்க இராணுவத் தளத்தை இலக்கு வைத்த ஈரான்; அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு பின்னடைவு!

வளைகுடா நாடொன்றில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ நிலையை இலக்கு வைத்து ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நிலையை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்டுள்ள முதல் தாக்குதல் முயற்சியாக இது கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானின் சிரிக் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM, பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சொத்துச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அமெரிக்கத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ள தகவலை CENTCOM மறுத்துள்ளது. ரேடார் அமைப்பு தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்றும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்திலிருந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைத் தாக்குவதை ஈரான் பெரும்பாலும் தவிர்த்து வந்தது. அதற்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பில் ட்ரம்ப் கருத்து

இந்தத் தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஈரானுடன் இனி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில், ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய காலம் முடிவடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா ஈரானின் நிதி வளங்களையும் ஹோர்முஸ் நீரிணையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பில் இருந்த துணை ஜனாதிபதி JD Vance-க்கு, ஜனநாயகக் கட்சி நிர்வகிக்கும் மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஊழல், குற்றச்செயல்களை ஒழிப்பதில் முழுக் கவனம் செலுத்துமாறு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைவர் Roman Gofman வெள்ளிக்கிழமை வொஷிங்டனுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA-வின் இயக்குநர் John Ratcliffe-ஐ சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அமெரிக்காவின் ஒப்புதல் கிடைத்தால் தனித்துவமான தாக்குதலை முன்னெடுப்பது குறித்தும் இஸ்ரேல் பரிசீலித்துள்ளதாக இரண்டு இஸ்ரேலியத் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் கப்பல் தாக்குதல்கள்

இதற்கிடையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 37 கப்பல்கள் தாக்கப்பட்டதாக Lloyd’s List நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்போதைய மோதல் ஆரம்பித்ததிலிருந்து ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். நவம்பர் மாதத்திலும் இதுவரை குறைந்தது 14 கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடல்சார் புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் போக்குவரத்து தொடர்வதாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA), உலகளாவிய எண்ணெய் விநியோகம் தேவையை விட அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய்ச் சந்தை படிப்படியாகச் சமநிலையை நோக்கிச் செல்வதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாகவும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாகத் தமது நாடு கடுமையான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாக ஈரான் கூறியுள்ளது. தற்போதைய மோதல் நிலை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போரை கண்ணியமான முறையில் முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி Masoud Pezeshkian முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், மோதல் மீண்டும் தீவிரமடைந்தால் ஐரோப்பா வரையிலான அமெரிக்க நலன்களைக் கூட இலக்கு வைத்து தாக்குதல்களை விரிவுபடுத்த நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகள் மந்தமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனை நோக்கிய ஈரானின் புதிய தாக்குதல் முயற்சி மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore