அமெரிக்காவின் வொஷிங்டனை இலக்கு வைத்து ‘அழுக்குக் கதிரியக்கக் குண்டு’ தாக்குதலுக்குத் திட்டமிடுகிறதா ஈரான்? – அமெரிக்க உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அமெரிக்கா: அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யில் (Washington, DC) டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து, கதிரியக்கப் பொருட்கள் பயன்படுத்தப்படும் ‘அழுக்குக் கதிரியக்கக் குண்டு’ (Dirty Bomb) அல்லது இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறைக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் ஏழு பேரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், ஈரானின் திட்டமிடல் தொடர்பான தகவல்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தை ஈரான் நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதா அல்லது அதற்கான ஆட்கள் மற்றும் வளங்கள் அந்நாட்டிடம் உள்ளனவா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தற்போது கிடைத்துள்ள உளவுத்துறைத் தகவல்களின்படி, ஈரானின் நடவடிக்கை உடனடியாகத் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறியாக இல்லாமல், எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய தாக்குதல் வாய்ப்புகளைத் தயாராக வைத்திருக்கும் முயற்சியாக இருக்கலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், குறித்த திட்டமிடல் பொதுவான அச்சுறுத்தலாக மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் இடங்களையும் உள்ளடக்கியுள்ளதாக இரண்டு தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் பலமுறை சந்தித்து சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

உடனடி அச்சுறுத்தல் இல்லை – வெள்ளை மாளிகை

இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை பேச்சாளர் லோரன் பிஸ் (Lauren Bis), அனைத்து சாத்தியமான அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய நிலையில் அமெரிக்கத் தாயகப் பகுதிக்கு நம்பகமான உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஈரானின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கடுமையான தடைகள் மற்றும் முற்றுகை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறியுள்ளனர்.

இந்தச் சூழலில், அமெரிக்காவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஈரான் பரிசீலித்து வருவதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒரு அமெரிக்க அதிகாரி CNN-க்கு கருத்துத் தெரிவிக்கையில், இத்தகைய தாக்குதலை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆட்கள் ஈரானிடம் உள்ளனரா என்பது இன்னும் விவாதத்திற்குரிய விடயமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘Dirty Bomb’ என்றால் என்ன?

‘அழுக்குக் கதிரியக்கக் குண்டு’ அல்லது Dirty Bomb என்பது பாரம்பரிய வெடிகுண்டுடன் கதிரியக்கப் பொருட்களை இணைத்து உருவாக்கப்படும் ஆயுதமாகும்.

இது அணுகுண்டைப் போன்றதல்ல. அணுகுண்டு அணுக்கருப் பிளவு (Nuclear Fission) மூலம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். ஆனால் Dirty Bomb என்பது வழக்கமான வெடிப்புச் சக்தியைப் பயன்படுத்தி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கதிரியக்கப் பொருட்களைச் சுற்றுப்புறத்தில் பரப்பும் வகையில் செயல்படுகிறது.

இத்தகைய குண்டு வெடிக்கும் போது, அதன் நேரடி வெடிப்பினால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படலாம். அதேவேளை, காற்றில் பரவும் கதிரியக்கத் துகள்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்கள் உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயமும், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளபடி, இத்தகைய ஆயுதத்தின் முக்கிய நோக்கம் துல்லியமான இராணுவத் தாக்குதலை மேற்கொள்வதல்ல; மாறாக அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகும்.

இருப்பினும், இத்தகைய ஆயுதத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான கதிரியக்கப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதே முக்கியமான சவாலாக இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவுக்குள் ஏற்கனவே பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளனவா?

அமெரிக்க உளவுத்துறை ஈரானுடன் தொடர்புடைய சில தகவல் பரிமாற்றங்களைக் கண்காணித்துள்ளதாகவும், அமெரிக்காவுக்குள் வெடிகுண்டு தயாரிப்புக்கான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் பேசப்பட்டதாகவும் CNN செய்தி தெரிவிக்கிறது.

எனினும், இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை.

அதேவேளை, கதிரியக்கப் பொருட்கள் அல்லது இரசாயன முகவர்கள் ஏற்கனவே அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறையும் சில தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு ஈரான் தனது பயிற்சி பெற்ற நபர்களை நேரடியாக அமெரிக்காவுக்குள் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும், ஏற்கனவே அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரைத் தாக்குதலுக்காகத் தூண்டுவது போன்ற சாத்தியக்கூறுகளும் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனினும், அமெரிக்காவுக்குள் உண்மையில் கதிரியக்கப் பொருட்கள் அல்லது தாக்குதலுக்கான உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரானின் மறுப்பு

அமெரிக்க உளவுத்துறைத் தகவல்கள் தொடர்பாக, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதரகத்தின் பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எந்தவொரு சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஈரான் முற்றிலும் சட்டவிரோதமானதாகக் கருதுவதாகவும், இது தொடர்பாகப் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளைத் தவறானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை எனவும் அவர் நிராகரித்துள்ளார்.

எனினும், வொஷிங்டனில் Dirty Bomb தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தொடர்பான குறிப்பிட்ட உளவுத்துறைத் தகவல்களுக்கு அந்த அறிக்கையில் நேரடியாகப் பதிலளிக்கப்படவில்லை என CNN தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரானிடமிருந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராகத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்படும் தகவல்களின் பின்னணியில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) கடந்த வாரம் இராணுவக் குடியிருப்புக்கு மாற்றப்பட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளை இலக்கு வைத்து ஈரானுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் ஏற்கனவே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டு ட்ரம்பைக் கொலை செய்வதற்கான கூலிப்படைத் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்னர் வெளியாகியிருந்தன.

இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் அமெரிக்க அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களை இலக்கு வைத்திருந்ததாக அமெரிக்கத் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

உளவுத்துறை கண்காணிப்புச் சட்டம் குறித்த கவலை

இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கண்டறிவதில் அமெரிக்க உளவுத்துறை பயன்படுத்தும் கண்காணிப்பு அதிகாரங்களும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

வெளிநாட்டவர்களின் தகவல் தொடர்புகளைச் சேகரிக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் கண்காணிப்புச் சட்டத்தின் ஒரு முக்கிய பிரிவு (Section 702), வெள்ளை மாளிகைக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளின் பின்னணியில் ஜூன் மாதம் காலாவதியானதாக CNN செய்தி குறிப்பிடுகிறது.

எனினும், அதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் 2027 மார்ச் மாதம் வரை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க சட்டமா அதிபர் டோட் பிளாஞ்ச், தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் ஜே கிளேட்டன் மற்றும் CIA பணிப்பாளர் ஜோன் ரட்கிளிஃப் ஆகியோர் காங்கிரஸின் இரு கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அமெரிக்காவின் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கப் படையினருக்கும் அதிகரித்துள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தச் சட்டம் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கும் இரசாயன ஆயுத அச்சுறுத்தல்?

வொஷிங்டன் தொடர்பான தகவல்களுக்கு மேலதிகமாக, மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற மற்றொரு உளவுத்துறைத் தகவலையும் அமெரிக்க அதிகாரிகள் கண்காணித்து வருவதாக இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப் படையினரிடம் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் போதுமான அளவில் இல்லை என சில அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பணியாற்றும் அமெரிக்க இராஜதந்திர மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் தனியான அவசரத் திட்டமிடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணைப் பதற்றமும் தொடரும் இராஜதந்திர முயற்சிகளும்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பதற்றத்துடனும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் இராணுவ மோதல்களை நிறுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்ட விரும்புவதாக பிராந்தியத் தகவல் மூலம் ஒன்று தெரிவித்துள்ள போதிலும், முக்கியமான சலுகைகளை வழங்குவதற்கான நிலைப்பாட்டில் இரு தரப்பினரும் இன்னும் மாற்றத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

அடுத்த சில வாரங்கள் உடன்பாட்டை எட்டுவதற்கு முக்கியமான காலப்பகுதியாக அமையும் எனவும், மோதலைத் தொடர்ந்து நீடிக்க விரும்பும் சில தரப்பினர் சமாதான முயற்சிகளுக்குத் தடையாகச் செயல்படக்கூடும் எனவும் அந்தத் தகவல் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானின் கடும்போக்காளர்கள் அல்லது அரச கட்டமைப்பில் உள்ள கட்டுப்பாடற்ற குழுக்கள் இத்தகைய தாக்குதல்களை முன்னெடுக்கத் தூண்டப்படலாம் என்ற சாத்தியக்கூறுகளும் அமெரிக்கத் தரப்பில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இவை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் அதிகாரிகளின் மதிப்பீடுகளின் அடிப்படையிலானவை. வொஷிங்டனில் Dirty Bomb அல்லது இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்த ஈரான் இறுதி முடிவு எடுத்துள்ளது என்பதற்கோ, அத்தகைய தாக்குதல் உடனடியாக இடம்பெறவுள்ளது என்பதற்கோ இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் வெளியாகவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore