ஸ்பெயினுக்குச் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, அந்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘நோலோட்டில்’ (Nolotil) எனப்படும் வலிநிவாரணி மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘மெட்டமைசோல்’ (Metamizole) எனப்படும் இந்த மருந்து, வலி நிவாரணத்திற்கும் அதிக காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஸ்பெயினில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், ஸ்பெயினின் மருத்துவமனை மருந்தகச் சங்கம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அலிகான்டே (Alicante) மாகாணத்தில் இரண்டு வருட காலப்பகுதியில் இந்த மருந்தின் பக்கவிளைவுகளால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஏழு பேர் பிரித்தானியர்கள் எனவும், இந்த மருந்தின் பாதகமான விளைவுகளால் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் பிரித்தானியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் ‘எல் பைஸ்’ (El País) பத்திரிகை திங்கட்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இந்த உயிரிழப்புகளும் வைத்தியசாலை அனுமதிகளும் பதிவான பகுதியில் அதிகளவிலான பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளும் அங்கு நிரந்தரமாக வசிக்கும் பிரித்தானியர்களும் உள்ளனர்.
பிரித்தானியர்களுக்கு அதிக ஆபத்தா?
ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒப்பீட்டில், மருந்தின் தரப்படுத்தப்பட்ட தினசரி அளவை அடிப்படையாகக் கொண்டபோது, பிரித்தானிய நோயாளிகளிடையே பாதகமான எதிர்வினைகள் ஏற்படும் வீதம் ஸ்பானிய நோயாளிகளை விட சுமார் 120 மடங்கு அதிகமாக இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மெட்டமைசோல் மருந்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட மற்றுமொரு ஒப்பீட்டில், இந்த வீதம் சுமார் 79 மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆய்வின் வழிமுறைகள் தொடர்பில் ஸ்பெயினின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முகவர் நிறுவனம் (AEMPS) கேள்வி எழுப்பியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு இந்த மருந்தினால் பாதகமான எதிர்வினைகள் ஏற்படும் வாய்ப்பு 120 மடங்கு அதிகம் என்பதற்கான உறுதியான ஆதாரமாக இந்தப் புள்ளிவிவரங்களைக் கருத முடியாது என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மரபணு அல்லது ஏனைய மக்கள் தொகை சார்ந்த காரணிகள் இந்த வேறுபாட்டுக்குக் காரணமாக இருக்கின்றனவா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து
மெட்டமைசோல் மருந்தினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் காரணமாக, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், சில நாடுகளில் அதன் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஸ்பெயினில் இது மருத்துவர்களின் பரிந்துரையுடன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மருந்தாகத் தொடர்கிறது. அதன் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களும் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாங்க அறிவுறுத்தலின் அடிப்படையில், மருத்துவப் பரிந்துரையின்றி இந்த மருந்தை வழங்குவதை நிறுத்துமாறு சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அதற்குப் பின்னரும் சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதாகப் பிரசாரகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்
அலிகான்டே பகுதியில் சுற்றுலா செல்லும் அல்லது வசிக்கும் பிரித்தானியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளில் ‘மெட்டமைசோல்’ உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும், அது ‘நோலோட்டில்’ அல்லது வேறு வர்த்தகப் பெயர்களில் விற்பனை செய்யப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருந்தின் சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து அறிந்துகொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





