மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது 14 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி சத்தியநாதன் சதீஷா (11) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதி, தனது வீட்டின் குளியலறையில் உள்ள நீர் தொட்டிக்குள் மயக்கநிலையிலிருந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சம்பவத்திற்கு முன்னர் மொபைல் போன் தொடர்பாக இரு சகோதர, சகோதரிக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குழந்தைகளின் தாய் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், தந்தையும் வேலைக்காக வெளியே சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகராறு தீவிரமடைந்ததன் விளைவாக சிறுமி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பின்னர் சிறுவன் அயல் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வேலையிலிருந்து வீடு திரும்பிய தந்தை குழந்தைகளை தேடியபோது, தனது மகளை வீட்டின் நீர் தொட்டிக்குள் மயக்க நிலையில் கண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
பொலிஸ் விசாரணைகளின் போது, சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக 14 வயது சிறுவன் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





