தென்கிழக்கு ஆசியாவில் இயங்கி வந்த சர்வதேச ஆன்லைன் மோசடி வலையமைப்புகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கூட்டு நடவடிக்கையின் மூலம் 63 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 14 இலட்சத்திற்கும் அதிகமான சமூக ஊடக கணக்குகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் Meta, Microsoft, Coinbase, Starlink, அமெரிக்க FBI, US Secret Service, அமெரிக்க நீதித்துறை, தாய்லாந்து அரச பொலிஸ் உள்ளிட்ட பல நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து செயல்பட்டன.
அதிகாரிகள் தெரிவிக்கையில், காதல் மோசடிகள் (Romance Scams), முதலீட்டு மோசடிகள் (Investment Fraud), கட்டாய தொழிலாளர் முகாம்களுடன் தொடர்புடைய இணைய மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவியல் கும்பல்கள் இலக்காகக் கொள்ளப்பட்டன.
நடவடிக்கையின் போது:
🔹 Meta நிறுவனம் Facebook மற்றும் Instagram தளங்களில் மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 14 இலட்சத்திற்கும் அதிகமான கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களை அகற்றியது.
🔹 Microsoft சுமார் 20,000 மோசடி கணக்குகளை இடைநிறுத்தியது.
🔹 Coinbase நிறுவனம் குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய 3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கிரிப்டோ சொத்துக்களை முடக்கியது.
🔹 Starlink ஆயிரக்கணக்கான இணைய முனையங்களின் (Internet Terminals) இணைப்புகளை துண்டித்தது.
மேலும், தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளின் மூலம் புதிய மோசடி மையங்கள் மற்றும் குற்றவியல் வலையமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான தகவல்கள் மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சர்வதேச அளவில் பரவி வரும் இணைய மோசடிகளை ஒடுக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் சட்ட அமலாக்க அமைப்புகளும் இணைந்து செயல்படுவது மிக முக்கியம் என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது” என Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, உலகளாவிய ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு எதிரான அண்மைக்காலத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது





