இலங்கையின் சுற்றுலாத்துறை புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளதுடன், 2026 மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 மே மாதத்தில் 145,745 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது மே மாதத்திற்கான வரலாற்றிலேயே அதிகபட்ச வருகைப் பதிவாகும்.
2025 மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 9.6 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதுடன், அந்நாட்டிலிருந்து 60,342 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து: ▪️ ஐக்கிய இராச்சியம் – 9,248
▪️ சீனா – 9,156
▪️ ஜெர்மனி – 6,734
▪️ அவுஸ்திரேலியா – 6,414
பேர்வழிகளாக பதிவாகியுள்ளனர்.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், 2021 மே மாதத்தில் வெறும் 1,497 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சுமார் 150,000 ஆக உயர்ந்திருப்பது சுற்றுலாத்துறையின் வலுவான மீட்சியை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
“2026 மே மாதம் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஒரு வரலாற்றுச் சாதனையாகும். நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சரியான கொள்கைகளின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தேர்ந்தெடுத்த அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் நன்றி,” என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.





