கொந்தளிக்கும் கடல்! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார் முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடல் அலைகள் மிக அதிக உயரத்திற்கு எழும்பும் அபாயம் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய படகுகள் மற்றும் பாரம்பரிய படகுகளின் உரிமையாளர்கள், மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கற்பிட்டியிலிருந்து சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கும் அலைகள் உயர்வதற்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் நிலவும் சூழ்நிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பாகத் தொழிலில் ஈடுபடக்கூடிய பொருத்தமான சூழல் நிலவினால் மட்டுமே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், அபாயகரமான சூழ்நிலைகளில் தொழிலைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“மீன்பிடித் தொழிலுக்காகப் புறப்பட்டுச் செல்வது முதல், கடலில் தொழிலில் ஈடுபடும் காலம் மற்றும் மீண்டும் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பும் வரை முழுமையான காலப்பகுதியிலும் ‘உயிர்காப்பு அங்கிகளை’ (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயமாகும் என்பதை நாங்கள் மீண்டும் நினைவூட்டுகிறோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற விபத்துகளின் போது, உயிர்காப்பு அங்கிகளைச் சரியாக அணிந்திருந்த மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன என்றும், அவ்வாறு செய்யாதவர்கள் தங்களின் பெறுமதியான உயிர்களை இழக்க நேரிட்டது என்பதையும் நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்து பொறுப்புடன் செயற்படுமாறும் அத்திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore