பண்டாரவளை பகுதியில் இயங்கி வந்த பிரபல காபி கடை ஒன்றுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ரூ.4 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல்வேறு சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில், விலை, எடை, உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி போன்ற கட்டாய தகவல்கள் இல்லாமல் கேக் மற்றும் பிஸ்கட் பொதிகள் விற்பனை செய்யப்பட்டதுடன், காலாவதியான பிஸ்கட் பொதிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
மேலும், காலாவதியான உணவுப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் களஞ்சியங்களில் சேமித்து, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பில் பயன்படுத்தும் வகையில் வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரபல வர்த்தக நிலையங்களில்கூட உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதியிலுள்ள விபரங்கள், விலை மற்றும் காலாவதி திகதியை நுகர்வோர் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோர் உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





