வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பின்னணியில், அர்ஜென்டினா கால்பந்து வீரர் லூக்காஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் வெனிசுவேலா கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை குறைந்தது 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ட்ரெஜோவின் மனைவி யானினா மரனெல்லா மற்றும் அவரது குழந்தைகள் ஆரோன் மற்றும் ஐனோயா ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக குடும்ப நண்பர் எட்சன் டோர்டெலெரோ தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட செய்தியில், “லூக்காஸ் ட்ரெஜோவின் குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரர் விளையாடும் வெனிசுவேலா கிளப் “Club Sport Marítimo de La Guaira” கூட அதிகாரப்பூர்வமாக இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. 74 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கிளப் தெரிவித்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் கால்பந்து உலகத்தையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் பலரும் இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





