அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2025ஆம் ஆண்டில் தனது கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தொடர்பான முதலீடுகள் மூலம் சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க அரசின் நெறிமுறை அலுவலகம் (Office of Government Ethics) வெளியிட்ட சொத்து மற்றும் வருமான அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் தங்களது வருமானம் மற்றும் சொத்து விபரங்களை கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.
900 பக்கங்களுக்கும் அதிகமான இந்த அறிக்கையின்படி, World Liberty Financial என்ற கிரிப்டோ நிறுவனத்துடனான தொடர்பின் மூலம் மட்டும் டிரம்ப் சுமார் 550 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுள்ளார்.
2024 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு டிரம்ப் குடும்பம் தனது பெயரையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. அந்த நிறுவனம் வெளியிட்ட WLFI என்ற கிரிப்டோ நாணயத்தின் ஆரம்ப விற்பனை மூலம் 550 மில்லியன் அமெரிக்க டொலர் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப் மற்றும் அவரது மூன்று மகன்கள் DT Marks Defi என்ற நிறுவனத்தின் ஊடாக 22.5 பில்லியன் WLFI டோக்கன்களை பெற்றுள்ளனர். அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படுகிறது.
அத்துடன், 2025 ஜனவரியில் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட $TRUMP கிரிப்டோ நாணயத்தின் உரிமம் (Licensing Agreement) தொடர்பாக டிரம்ப் 635 மில்லியன் அமெரிக்க டொலர் ரொயல்டி வருமானமும் பெற்றுள்ளார்.
Forbes இதழின் மதிப்பீட்டின்படி, கிரிப்டோ முதலீடுகளே டிரம்பின் தனிப்பட்ட சொத்து மதிப்பை 2024ஆம் ஆண்டின் 2.3 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து, 2026ஆம் ஆண்டில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் கிரிப்டோ துறையில் முதலீடு செய்ததோடு, அதே துறைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், டிரம்ப் தொடர்ந்து நலன் முரண்பாடு (Conflict of Interest) குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
டிரம்பின் சொத்துக்கள் தற்போது அவரது மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் நிர்வகிக்கும் அறக்கட்டளை (Trust) ஒன்றின் கீழ் இருந்தாலும், அந்த அறக்கட்டளையை எப்போது வேண்டுமானாலும் கலைக்க முடியும் என்பதால், அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்ததும் டிரம்ப் மீண்டும் அதன் முழு கட்டுப்பாட்டைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





