ஐக்கிய நாடுகளின் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிற்கான பல்பரிமாண ஒருங்கிணைந்த நிலைநிறுத்தல் பணியில் (MINUSCA) ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படையின் விமானப் பிரிவு, ஆயுதத் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்கும் அவசர மருத்துவ விமானப் பணியை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஜூன் 30 ஆம் திகதி, Am Dafok பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாம்பியா அமைதிப்படை வீரர்கள் மீது அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியதில், சாம்பியா அமைதிப்படை வீரர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பலர் காயமடைந்தனர்.
மோசமான வானிலை காரணமாக மற்றொரு ஹெலிகொப்டர் புறப்பட முடியாத நிலையில், இலங்கை விமானப்படையின் Mi-17 ஹெலிகொப்டர் அவசர மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டது.
குரூப் கேப்டன் அசிரி பதிரகே தலைமையிலும், பிளைட் லெப்டினன்ட் தில்ஹாஷ் அதபத்து இணை விமானியாகவும் செயல்பட்ட குழு, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவிய போதிலும் Am Dafok பகுதிக்கு பறந்து சென்றது.
பகுதியளவில் பாதுகாக்கப்பட்ட ஹெலிபேடில் தரையிறங்கிய விமானக் குழு, ஹெலிகொப்டரின் இரு இயந்திரங்களையும் இயங்கும் நிலையில் வைத்தபடி காயமடைந்தவர்களை விரைவாக ஏற்றிச் சென்று பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்தது. பயணத்தின் முழு நேரமும் விமானத்திலிருந்த மருத்துவக் குழு காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கியது.
இந்த நடவடிக்கையின் மூலம் மொத்தம் 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் Birao விமான தளத்தில் உள்ள Level-1 வைத்தியசாலைக்கும், மேலும் 5 ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் Bria நகரிலுள்ள Level-2 மருத்துவமனைக்கும் விமானம் மூலம் மாற்றப்பட்டனர்.
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை விமானப்படையினர் இந்த உயிர்காக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியமை பாராட்டுக்குரியதாகும்.





